Sunday, July 28, 2019

மனித வாழ்வின் புரிதல்கள் - 1

Date: 27th July, 2019

இன்று ஒரு வேலை நிமித்தமாக சென்னையில் உள்ள கந்தன்சாவடி ஏரியாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு ஆட்டோக்காரர் என்னைக் கூப்பிட்டு தம்பி, இந்த மொபைல் போன் ஆன் ஆக மாட்டிது. கொஞ்சம் ஆன் பண்ணிக் கொடுப்பா என்றார்.

அந்த மொபைல் போனை கையில் வாங்கிப் பார்த்தேன். அது ஒரு விவோ மாடல் புது மொபைல் போன். அப்பொழுது அவருடைய சட்டைப் பையில் டச் பேட் ரக பழைய மொபைல் போன் ஒன்று இருந்ததையும் பார்த்தேன்.

அதைப் பார்த்தவுடன், யாரோ ஆட்டோல வந்தவங்க போனை மிஸ் பண்ணிட்டாங்க போல, அத எடுத்து இவரு வச்சிருக்காரோ என்று நினைத்துக் கொண்டேன். ஆன் பட்டனை தொடர்ந்து அழுத்தி, போன் ஸ்டார்ட் ஆனதும் அவர் கையில் கொடுத்தேன். எங்க பேட்டர்ன் லாக்க கரெக்டா போடுறாரா பார்ப்போம்னு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த போன்லா யூஸ் பண்ணத் தெரியாது தம்பி. என் மகன் தான் வேணாம்னு சொல்லியும் வாங்கிக் கொடுத்தானு சொல்லிக்கொண்டே கரெக்டா பேட்டர்ன் லாக்கப் போட்டார். ரொம்ப கஷ்டமான "ட' வடிவ பேட்டர்ன் லாக் அது.

பேட்டர்ன் லாக் போட்டு உள்ள போனா, பிங்க் கலர் சர்ட், ஜீன்ஸ் அண்ட் கூலர் அணிந்தவாறு வால்பேப்பரில் ஒரு பையன் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கு என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. கண்டிப்பாக அது அவர் மகனாகத் தான் இருக்க முடியும்.

சே... இவரப் போயி தப்பா நினைச்சுட்டோமேனு கொஞ்சம் பீல் பண்ணிட்டிருக்கும் போதே, தம்பி  விரல் வச்சா ஒர்க் ஆகும்னு பையன் சொன்னான், ஒர்க் ஆக் மாட்டிது போலனு சொல்லிட்டே தன்னுடைய விரலை போன் பின்புறம் உள்ள சென்சாரில் எடுத்து எடுத்து வைத்து செக் பண்ணிக் கொண்டிருந்தார்.

அண்ணா, நீங்க ஏற்கனவே பேட்டர்ன் போட்டு போனை அன்லாக் பண்ணிட்டிங்க. அதுனால இப்போ பிங்கர் பிரிண்ட் ஒர்க் ஆகாது என்று சொல்லிவிட்டு போனை லாக் பண்ணிட்டு, இப்போ டிரை பண்ணுங்க என்றேன்.

இப்பொழுது அவருடைய விரலை சென்சாரில் வைத்ததும், வெரிபிகேசன் சக்ஸஸ் ஆகி உள்ளே போனதும் அவர் பையன் மீண்டும் வால்பேப்பரில் சிரித்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப தாங்க்ஸ் தம்பினு சொல்லிவிட்டு யாருக்கோ போன் பண்ண ஆரம்பித்தார்.

அந்த ஆட்டோக்காரர் சொன்னார், எனக்கு இந்த போன்லா யூஸ் பண்ணத் தெரியாது தம்பி,  என் மகன் தான் வேணாம்னு சொல்லியும் வாங்கிக் கொடுத்தாருனு சொல்லிட்டு சிறு புன்னகை செய்தார். இப்பொழுதும் என் கண் முன் நிற்கிறது அந்த புன்னகை.

என் அப்பாவிற்கு நான் ஏன் இந்த சிரிப்பைக் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். அப்பொழுது இந்த மாதிரி ஒரு போனை அவருக்கு வாங்கிக் கொடுக்க எனக்குத் தோணவில்லை, ஒருவேளை  அப்பொழுது அவ்வளவாக என்னிடம்  பணமில்லாமல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். இப்பொழுது என்னால் வாங்கிக் கொடுக்க முடியும், ஆனால் அதை வாங்கிக் கொள்வதற்கு அவர் இப்பொழுது இல்லை.

இந்த மனித வாழ்க்கையும் அதன் புரிதல்களும் கொஞ்சம் விசித்திரமான ஒன்றாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

- வினோத்குமார் ராஜேந்திரன்.

Sunday, February 12, 2017

இதுக்குலா தீர்வு என்னனு சொல்லலையே?

ஜல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை இந்த பிரச்னைலா ஒரு பக்கம்…

சின்னம்மாவா இல்லை தீபாவானு புலம்புகிற மக்கள் கூட்டம் ஒரு பக்கம் (சில திராவிட கட்சிகளைத் தவிர state LA leaders வேற யாரும் இல்லையானு கேட்காதிங்க… 8+ கோடி மக்கள் இருக்குற இந்த மாநிலத்துல எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு),
Disclaimer: #இதுஅரசியல்பதிவல்ல… :)

அரசு இயந்திரம் இயங்குதானே தெரியாத அளவுக்கு, இருக்குற இடம் தெரியாம இருக்குற ………. ஒரு பக்கம், 
Disclaimer: #இதுஅரசியல்பதிவல்ல… :)

என்ன பிரச்னை நடந்தாலும் ஒரு meme போட்டுட்டா அது சரியாயிடும்னு நினைக்கிற இளசுகள் ஒரு பக்கம்,
அந்த meme ah like & share பண்றதவிட நம்ம வேலை முடிஞ்சுச்சுனு நினைக்குற நாம ஒரு பக்கம்,

[எந்த பிரச்னை வந்தாலும் நகைச்சுவையா meme போட்டுட்டு அந்த பிரச்னைக்கான தீர்வை ஆராயாமல் அடுத்த பிரச்னை பற்றி meme போடுறது (meme counts தான் அதிகமாகுது. I mean problems count. But there is no solution for a single issue).]

Dubsmash பேர்வழிகள் இன்னொரு பக்கம் (முதல் நடிப்பு தான் என்றுமே சிறந்தது என்பது என் அபிப்ராயம்),

யாரு எப்பிடி போனா நமக்கு என்னனு இருக்கிற சில உத்தமர்கள் ஒரு பக்கம்,
விஜய் & அஜித் படங்களுக்கு Like or comment nu post போடும் விசிறிகள் ஒரு பக்கம்,

ATM பிரச்னை (நம்ம state LA Dan இந்த பிரச்னை அதிகமா இருக்குனு நினைக்கிறேன். Because design apdi iruku), விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, School la L.K.G சேர்க்க 50,000 fees… etc etc.

இவ்வாறாக பல வித்தியாசமான மனிதர்கள், பிரச்னைகள் நிறைந்தது தான் இந்த சமூகம்.

இதுக்குலா தீர்வு என்னனு சொல்லலையே?

நான் தீர்வு சொல்றேனு சொல்லலையே. Solution கிடைச்சா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன். :)

-- கமல் சொல்ற மாதிரி மறதி நம் நாட்டின் தேசிய வியாதி.

சமூகவலை தள நண்பர்களுக்காக...

பொது இடங்களில் சொந்த மனைவியையோ பெண் பிள்ளைகளையோ “டி” போட்டு கூப்பிடுவது தவறு என்று தெரிந்த நாகரிக ஆண்மகன்களுக்கு,

சமூக, கலாச்சார பிரச்னைகளுக்கு ஒருத்தி கூறும் மாற்று கருத்துகளுக்கு அவளை கண்டபடி வசைபாடுவது தவறு என அவர்களுக்கு தெரியவில்லை.
அவளும் பெண்தானே?

கருத்து சுதந்திரம் ஒருவரின் கருத்தையோ, செயல்களை விமர்சிப்பதாக இருக்க வேண்டுமே தவிர அவரைப் பற்றிய சுய விமர்சனம் கூடாது.

முரண்பட்ட கருத்து தெரிவிக்கும் பெண்களைப் பற்றி வசைபாடும் சமூகவலை தள நண்பர்களுக்காக இந்த பதிவு.

History of Valentine’s day in Tamil

ரோமானியப் பேரரசில் பலவித போர்கள் நடந்து கொண்டிருந்ததால் ஆண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அரசன் ஆணையிடுகிறான்.

Valentine என்கிற bishop தன்னை தேடி வந்த காதல் ஜோடிகளுக்கு அரசனின் ஆணையை மீறி ரகசியமாக திருமணம் செய்து வைக்கிறார். 

அரசனின் ஆணையை மீறியதால் Valentine-கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அங்குள்ள சிறைக் காவலாளியை பார்க்க வரும் காவலாளியின் மகளுடன் பிசப் valentine-கு காதல் ஏற்படுகிறது. 



(அந்த பெண் கண் பார்வையற்றவராக இருந்தார் என்றும்  bishop valentine பார்வை வர அருள் புரிந்தார் என்றும் ஒரு கதை உண்டு).

Valentine அரசனுடைய ஆணை தவறு என்பதில் உறுதியாக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் ப்டுகிறது. 

தண்டனையை நிறைவேற்றும் முன் அவருடைய கடைசி ஆசை என்னவென்று கேட்கப்படுகிறது.

அந்த farewell note-ல் “for your valentine” என்றவாறு தன் காதலிக்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுக்கிறார். மரண தண்டனையும் நிறைவேற்றப் படுகிறது.

#Valentine is believed to have been executed on February 14th, 270AD.

Thursday, October 13, 2016

வாழ்க்கை என்னும் நீண்ட பயணம்...

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். அதன் பயண தூரமானது அவரவர்களின் விதியைப் பொறுத்தது.

நாம்  பொதுவாக பயணம் மேற்கொள்வதை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று பயண நோக்கம் / காரணம், மற்றொன்று சேரும் இடம். இவை இரண்டும் தெரிந்தால்தான் பயணம் சாத்தியமாகும்.

வாழ்க்கை என்ற பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரண்டு விடயங்களும் நமக்கு தெரியாது. அதனை அறிந்து கொள்ள பயணிப்பதே வாழ்க்கை.


நமது படைப்பின் நோக்கம் என்ன? அதை அறிந்து கொள்ள நினைத்தது உண்டா?

தனக்காக,
தன் குடும்பத்திற்காக,
தன் சமூகத்திற்காக,
தான் வாழும் இந்த பூமி, இயற்கைக்காக,
நாம் செய்த, செய்ய வேண்டிய செயல்கள் / கடமைகள் என்ன?

இல்லை மற்ற ஜீவராசிகளைப் போல பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விட வேண்டியவர்களா மனிதர்கள்?

உணவு, உழைப்பு, காமம், தூக்கம் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக் கூடிய பொது உணர்வுகளை மட்டும் பெற்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையா?

மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கை என்பது கிடையாதா? அதனை உணர்ந்து நாம் பயணித்தது உண்டா?

வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் தேடிச் செல்வது ஒன்றுதான்.
அது இன்பம். ரஜினி வசனத்தில் சொல்வதென்றால் “மகிழ்ச்சி”.

பிடித்த உணவை சாப்பிடுவது,
பிடித்த செயலை செய்வது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த ஆணிடம் / பெண்ணிடம் பேசுவது.
இவ்வாறாக இன்பம் தரக்கூடிய செயல்களை தேடி செய்வது / செல்வதுதான் மனித வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது.

அந்த ஆனந்த தேடலில் நாம் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த துன்பங்களை எதிர்கொள்வதனால் உருவான அனுபவங்களை, அடுத்த தேடலுக்கான எதிர்மறையாக மாற்றாமல்
துன்பத்தின் விளைவாய் கிடைத்த அனுபவங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த தேடலை நோக்கிச் செல்வதுதான் வாழ்க்கை.

ஆனால் தாம் செய்யும் செயல் துன்பத்தை விளைவிக்கும் என்பது தெரிந்தும் கண நேர சந்தோசஷத்திற்காக அதனை விரும்பி செய்பவர்கள் ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது, பாலியல் தவறுகள், திருடுவது, பிறரை ஏமாற்றுவது போன்ற எண்ணற்ற செயல்கள்.

எவ்வளவு பெரிய துயரத்திற்கும்
மிகச் சிறந்த மருந்து, காலம்.
நாட்கள் செல்ல செல்ல அதன் ரணம் குறைந்து நாளடைவில்
அந்த துயரம் முற்றிலும் மறைந்து போகும் சாலையில் மறையும் கானல் நீர் போல...

Saturday, January 23, 2016

மின்சார ரயிலில் ஒரு பயணம்…

நெடுந்தொலைவு பயணங்களும் அதன் சுவாரஷ்யமான நிகழ்வுகளும் எப்பொழுதும் நம் மனதில் நிற்கும். ஆனால் அவை அந்த பயணங்களைப் பற்றி நினைக்கும் பொழுது மட்டுமே.

மாறாக சிறு தொலைவு பயணமானாலும், அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமான தொடர் பயணங்கள் நமக்கு பல புரிதல்களையும், சில படிப்பினையையும் நல்குகின்றது என்பது உண்மை. அப்படி ஒரு பயணமான மின்சார ரயிலில் ஒரு பயணம்…


Ø ரயில் வருவதை தமிழ், ஆங்கிலம் மற்றும் "யாத் ரிகள் க்ருபாயா ஜாந்தெ சென்னை பீச் ஜானே வாலி அக்லி காடி தீம் நம்பர் ப்ளாட்பார்ம்" என ஹிந்தியிலும் திரும்ப திரும்ப அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்.

Ø கூட்ட நெரிசலுக்குப் பயந்து, டிக்கெட் எடுத்த பொது வகுப்பில் பயணம் செய்யாமல், போலியாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் சந்தர்ப்பவாதிகள். (நானும் சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக இருந்துள்ளேன்.)

Ø ரயிலில் இருக்கைகள் இருந்தாலும் படியில் நின்றுதான் பயணம் செய்வேன். அதுவும் நிற்கும்போது ஏறமாட்டேன், ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஓடும்போதுதான் ஏறுவேன் என்னும் கெத்து இளைஞர்கள்.

Ø ஒரு ஹெட் போனை ஆளுக்கு ஒரு காதில் வைத்துக் கொண்டு பாடல்களை ரசித்தவாறு பயணம் செய்யும் ஆண், பெண் நண்பர்கள்.

Ø தங்கள் நிறுவனத்தின் ஐ.டி.கார்டை வீட்டிலிருந்தே அணிந்தவாறு காலையில் அலுவலகம் சென்று, இரவில் வீடு திரும்பும் அலுவலர்கள்.

Ø தேர்விற்காக தேர்வரை வாசலில் தீவிரமாய் படிப்பது போல இந்த சிறு பயண இடைவெளியில் புத்தகத்தை  கரைத்து குடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் (பெரும்பான்மை).

Ø கொஞ்சல், சினுங்கல், மழலைப் பேச்சு என சுதந்திரமாக செயல்பட விரும்பும் குட்டிஷ்கள், அவர்களின் செயல்களை ரசித்தவாறு கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பெற்றோர்கள்.

Ø ஒரு அழகான பெண் தன் அன்பானவருடன் சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறான் என தெரிந்து, அவள் மீதான பார்வையை விலக்கினாலும், மறுபடியும் அவளை பார்க்கச் சொல்லி தூண்டும் மனம் கொண்ட கலாரசிகர்கள்.

Ø காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். எனக்கென்னவோ காதலர்களுக்குத் தான் சில நேரங்களில் பார்வை தெரிவதில்லை என தோன்றுவதுடன், மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அளவளாவி பேசி மகிழும் ஜோடிகள்.

Ø பிழைப்புக்காக வேறு மாநிலங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மூட்டை முடிச்சுகளுடன் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் நவீன் அகதிகள்.

Ø கடற்கரையில் இருந்து கொண்டு வந்த மீன் கூடைகளை ரயிலின் ஒரத்தில் அடுக்கி பாதி இடத்தை அடைத்ததுடன், தானும் கூடையின் அருகிலேயே அமர்ந்து அன்றைய தின வியாபாரத்திற்கு தயாராகும் பாட்டிமார்கள்.

Ø எதிரே உள்ள இருக்கைகள் காலியாக உள்ள போது தன் இரு கால்களையும் (சிலர் செருப்புகளுடன்) அந்த இருக்கைகளில் வைத்து தான் பயணம் செய்வேன் என்ற பரந்த மனம் கொண்ட பொதுநலவாதிகள்.

Ø கவனக் குறைவாலும், தற்கொலை எண்ணத்தாலும் ஒடும் ரயில் வண்டியில்  மோதி மண்ணுக்கு இரையாகும் முன்னோர்கள்.

இவ்வாறாக பல மனிதர்களின் பல விதங்களை இந்த சிறு பயணத்தில் காண்கிறேன்.

Ø தன் இயலாமையை காட்டி பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பவர்களுக்கும்,

Ø சும்மா காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தன் ஊனமுற்ற கால்களால் நகர்ந்து ரயிலின் தரைப் பகுதியை ஒரு துணியால் சுத்தம் செய்தும், கண் பார்வை தெரியாதவர்கள் புல்லாங்குழல் வாசித்தும், சிறு இசையை எழுப்பியவாறு பாடல்கள் பாடிக்கொண்டும்,

Ø குறவர் மக்கள் தன் சிறு குழந்தையை பல்டி அடித்தல், வளையத்துக்குள் புகுந்து வெளிவருதல் போன்ற செயல்களை செய்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கும்,

Ø கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒரு குச்சியினை வைத்து தட்டி தட்டி நடந்து வேர் கடலை பருப்பி, வாசனைப் பொருள்கள் விற்பவர்களுக்கும்,

Ø 4 ஆப்பிள் 50 ரூபாய், 4 மாதுளை 50 ரூபாய், ஊசி, பாசி, சிப்ஸ், வறுகடலை, என பலவகைப் பொருட்களை விற்பவர்களுக்கும்,

Ø கை தட்டி உரிமையோடு பயணிகளை தொட்டு காசு கேட்கும் திருநங்கைகளுக்கும்,

Ø கூடுவாஞ்சேரி அருகே 1 சதுர மீட்டர் ரூ. 900, செங்கல்பட்டு அருகே சதுர மீட்டர்  ரூ. 1300, கையில் மொபைல் இருந்தால் போதும் மாத வருமானம் ரூ. 10000, அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் (ஆனால் இதுவரை எந்த விளம்பரத்திலும் நிறுவனத்தின் பெயரை பார்த்ததில்லை.) 30,000 ரூபாய் சம்பளத்திற்கு ஆட்கள் தேவை போன்ற விளம்பரங்களுக்கும்

நகரும் ஊர்தியான இந்த மின்சார ரயில் மறைமுக வியாபாரமாகவும், நேர்முக வியாபாரமாகவும், நகரும் விற்பனை மையமாகவும், வழிகாட்டியாகவும், ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதை காண்கிறேன்.

ரயிலில் ஒரு சிறு பெண் தன் ஏழ்மையை காட்டி ஒரு ரூபாய் ஸ்டிக்கரை ஆறு ரூபாய்க்கு என்னிடம் விற்கிறாள். அவள் ஏமாற்றுகிறாள் என்பது தெரிந்தும் அவள் நிலையை பார்த்து  நான் ஏமாளியாகவே விரும்புகிறேன்.

ஆறு ரூபாய் கொடுத்துவிட்டு ஸ்டிக்கரை வாங்கிப் பார்த்தவுடன் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை என்ற நிலையில், இல்லைபா எனக்கு ஸ்டிக்கர் ஏதும் வேணாம். காச நீயே வச்சுக்கோ என்று சொன்னேன். சும்மா காசு வேணாம்ணா எதுவாச்சும் வாங்குறதுன மட்டும் காச வாங்கிக்கிறேன் என்று சொன்னாள். ஒரு நிமிடம் நான் அந்த தருணத்தில் அவளை நினைத்து பெருமிதம் கொண்டேன்.

இவ்வாறாக சில புரிதல்கள், பார்வைகள் மற்றும் சந்திப்புகளுடன் என் தொடர் பயணம் தொடர்கிறது...

Thursday, January 21, 2016

இதுதான் நம் நாடு

ஒருபுறம் "2BHK homes at Just 27 Lakhs only". (வெறும் 27 லட்சம் ரூபாய் மட்டுமே).

மறுபுறம், பிழைக்க வழி தேடி மூட்டை முடிச்சுகளுடன் வந்த இடத்தில், ப்ளாட்பாமில் அடுப்பை உண்டாக்கி அந்த வேளை பசியை போக்கும் மக்கள்.

இடம்: சென்னை புறநகர் ரயில் நிலையம்.




Thursday, December 31, 2015

தீதும் நன்றும் பிறர்தர வாரா...

தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா...


நடந்ததை யோசிக்க
நடப்பவை தடையடா
நடக்கும் என்பது
விதியின் செயலடா...

நீ காட்டிய மாயை
உன்னை மாயமாக்கும் நிஜமடா…


நீ ஏமாற்றிய உலகம்
உன்னை ஏமாற்றும்
உனக்கான தருணங்களை
நீ எதிர் கொள்வது நிச்சயம்...


வெளிச்சம் தேடும் உலகில்
ஒரு கரிய இருட்டு
உன்னை துரத்தும்


வழி தேடிச் செல்லும்
வழியறியா பயணத்தின் தொடக்கமிது...

Friday, October 2, 2015

நவீன அகதிகள்

தன்னுடைய குடும்பத்துக்காக ஒருவன் வேலை தேடி வேறு மாநிலத்துக்கு போனால் அது அவனுடைய கடமை.

பிழைக்க வழியில்லாமல் மூட்டை முடிச்சோடு அந்த குடும்பமே வேறு மாநிலத்துக்குப் போனால் அது அரசினுடைய மடமை...

Friday, August 21, 2015

நீயில்லா உலகத்தில்...

நிலவே என் உயிர் வாழவே
நீ வேண்டும் அருகினிலே

என் நெஞ்சத்தில் வலி ஏனடி
உன்  சுவாசமே மருந்தாகுமே

நீயில்லா உலகத்தில்
வாழ்வதே பெரும் அவஸ்தையடி

சாகட்டும் உயிர் போகட்டும்
வாழட்டும் என் காதல் மட்டும்

நெஞ்சங்கள் உயிர் வாழவே
நம் காதலே உயிர் மூச்சாகுமா

காதலில் பிரிவை உருவாக்கினாய்
அந்த பிரிவினால் எனை நீ ரணமாக்கினாய்

என்னுள் பூப்பூக்கும் மரமாக வளர்ந்தாயடி
அந்த மரமின்று வேரொடு சாய்ந்ததடி

தோழி, காதலி என்றிருந்தாய்
அந்த உறவு இன்று வெறும் கானல் நீரா
அது ஒரு காதல் கனா…

வாழ்க்கையின் அழகு காதலென்றேன்
அந்த காதலால் என் வாழ்க்கை இழந்தேனடி
பிரிவினாலே உன் பிரிவினாலே

நினைவில் உன்னுடன் பழகியதை விட
கனவில் உன்னுடன் வாழ்ந்தது அதிகம்
அதுவே இனி நிரந்தரமா..

தாயுண்டு தந்தையுண்டு
தன்னந்தனியா நானுமுண்டு

நான் இல்லை அவள் மனதில்
அவள் உண்டு என் மனதில்

அலைபேசி என் உடலின் அங்கமானதே
அவள் குரல் கேட்க

என் உடல் உயிரற்று போனதே
அவள் என்னை வெறுக்க

நேரமில்லா உலகில் தனியாக
தனியாக தவிக்கிறேன் பிரிவில்

உன்னைக் காண நண்பனைக் கழற்றிவிட்டேன்
நீ என்னைக் கழற்றிவிட

நண்பன் என்னைக் காண வந்தான்
ஆறுதல் சொல்ல…

நீயே உலகமென்று இருந்தேன்
இந்த உலகத்தில் நான் யாரென்று கேட்டாய்

என்னை மறந்து உன்னை நினைத்தேன்
உன்னை மறக்க என்னை தொலைக்கிறேன்...