Thursday, October 13, 2016

வாழ்க்கை என்னும் நீண்ட பயணம்...

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். அதன் பயண தூரமானது அவரவர்களின் விதியைப் பொறுத்தது.

நாம்  பொதுவாக பயணம் மேற்கொள்வதை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று பயண நோக்கம் / காரணம், மற்றொன்று சேரும் இடம். இவை இரண்டும் தெரிந்தால்தான் பயணம் சாத்தியமாகும்.

வாழ்க்கை என்ற பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரண்டு விடயங்களும் நமக்கு தெரியாது. அதனை அறிந்து கொள்ள பயணிப்பதே வாழ்க்கை.


நமது படைப்பின் நோக்கம் என்ன? அதை அறிந்து கொள்ள நினைத்தது உண்டா?

தனக்காக,
தன் குடும்பத்திற்காக,
தன் சமூகத்திற்காக,
தான் வாழும் இந்த பூமி, இயற்கைக்காக,
நாம் செய்த, செய்ய வேண்டிய செயல்கள் / கடமைகள் என்ன?

இல்லை மற்ற ஜீவராசிகளைப் போல பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விட வேண்டியவர்களா மனிதர்கள்?

உணவு, உழைப்பு, காமம், தூக்கம் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக் கூடிய பொது உணர்வுகளை மட்டும் பெற்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையா?

மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கை என்பது கிடையாதா? அதனை உணர்ந்து நாம் பயணித்தது உண்டா?

வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் தேடிச் செல்வது ஒன்றுதான்.
அது இன்பம். ரஜினி வசனத்தில் சொல்வதென்றால் “மகிழ்ச்சி”.

பிடித்த உணவை சாப்பிடுவது,
பிடித்த செயலை செய்வது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த ஆணிடம் / பெண்ணிடம் பேசுவது.
இவ்வாறாக இன்பம் தரக்கூடிய செயல்களை தேடி செய்வது / செல்வதுதான் மனித வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது.

அந்த ஆனந்த தேடலில் நாம் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த துன்பங்களை எதிர்கொள்வதனால் உருவான அனுபவங்களை, அடுத்த தேடலுக்கான எதிர்மறையாக மாற்றாமல்
துன்பத்தின் விளைவாய் கிடைத்த அனுபவங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த தேடலை நோக்கிச் செல்வதுதான் வாழ்க்கை.

ஆனால் தாம் செய்யும் செயல் துன்பத்தை விளைவிக்கும் என்பது தெரிந்தும் கண நேர சந்தோசஷத்திற்காக அதனை விரும்பி செய்பவர்கள் ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது, பாலியல் தவறுகள், திருடுவது, பிறரை ஏமாற்றுவது போன்ற எண்ணற்ற செயல்கள்.

எவ்வளவு பெரிய துயரத்திற்கும்
மிகச் சிறந்த மருந்து, காலம்.
நாட்கள் செல்ல செல்ல அதன் ரணம் குறைந்து நாளடைவில்
அந்த துயரம் முற்றிலும் மறைந்து போகும் சாலையில் மறையும் கானல் நீர் போல...

Saturday, January 23, 2016

மின்சார ரயிலில் ஒரு பயணம்…

நெடுந்தொலைவு பயணங்களும் அதன் சுவாரஷ்யமான நிகழ்வுகளும் எப்பொழுதும் நம் மனதில் நிற்கும். ஆனால் அவை அந்த பயணங்களைப் பற்றி நினைக்கும் பொழுது மட்டுமே.

மாறாக சிறு தொலைவு பயணமானாலும், அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமான தொடர் பயணங்கள் நமக்கு பல புரிதல்களையும், சில படிப்பினையையும் நல்குகின்றது என்பது உண்மை. அப்படி ஒரு பயணமான மின்சார ரயிலில் ஒரு பயணம்…


Ø ரயில் வருவதை தமிழ், ஆங்கிலம் மற்றும் "யாத் ரிகள் க்ருபாயா ஜாந்தெ சென்னை பீச் ஜானே வாலி அக்லி காடி தீம் நம்பர் ப்ளாட்பார்ம்" என ஹிந்தியிலும் திரும்ப திரும்ப அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்.

Ø கூட்ட நெரிசலுக்குப் பயந்து, டிக்கெட் எடுத்த பொது வகுப்பில் பயணம் செய்யாமல், போலியாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் சந்தர்ப்பவாதிகள். (நானும் சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக இருந்துள்ளேன்.)

Ø ரயிலில் இருக்கைகள் இருந்தாலும் படியில் நின்றுதான் பயணம் செய்வேன். அதுவும் நிற்கும்போது ஏறமாட்டேன், ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஓடும்போதுதான் ஏறுவேன் என்னும் கெத்து இளைஞர்கள்.

Ø ஒரு ஹெட் போனை ஆளுக்கு ஒரு காதில் வைத்துக் கொண்டு பாடல்களை ரசித்தவாறு பயணம் செய்யும் ஆண், பெண் நண்பர்கள்.

Ø தங்கள் நிறுவனத்தின் ஐ.டி.கார்டை வீட்டிலிருந்தே அணிந்தவாறு காலையில் அலுவலகம் சென்று, இரவில் வீடு திரும்பும் அலுவலர்கள்.

Ø தேர்விற்காக தேர்வரை வாசலில் தீவிரமாய் படிப்பது போல இந்த சிறு பயண இடைவெளியில் புத்தகத்தை  கரைத்து குடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் (பெரும்பான்மை).

Ø கொஞ்சல், சினுங்கல், மழலைப் பேச்சு என சுதந்திரமாக செயல்பட விரும்பும் குட்டிஷ்கள், அவர்களின் செயல்களை ரசித்தவாறு கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பெற்றோர்கள்.

Ø ஒரு அழகான பெண் தன் அன்பானவருடன் சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கிறான் என தெரிந்து, அவள் மீதான பார்வையை விலக்கினாலும், மறுபடியும் அவளை பார்க்கச் சொல்லி தூண்டும் மனம் கொண்ட கலாரசிகர்கள்.

Ø காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். எனக்கென்னவோ காதலர்களுக்குத் தான் சில நேரங்களில் பார்வை தெரிவதில்லை என தோன்றுவதுடன், மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அளவளாவி பேசி மகிழும் ஜோடிகள்.

Ø பிழைப்புக்காக வேறு மாநிலங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மூட்டை முடிச்சுகளுடன் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் நவீன் அகதிகள்.

Ø கடற்கரையில் இருந்து கொண்டு வந்த மீன் கூடைகளை ரயிலின் ஒரத்தில் அடுக்கி பாதி இடத்தை அடைத்ததுடன், தானும் கூடையின் அருகிலேயே அமர்ந்து அன்றைய தின வியாபாரத்திற்கு தயாராகும் பாட்டிமார்கள்.

Ø எதிரே உள்ள இருக்கைகள் காலியாக உள்ள போது தன் இரு கால்களையும் (சிலர் செருப்புகளுடன்) அந்த இருக்கைகளில் வைத்து தான் பயணம் செய்வேன் என்ற பரந்த மனம் கொண்ட பொதுநலவாதிகள்.

Ø கவனக் குறைவாலும், தற்கொலை எண்ணத்தாலும் ஒடும் ரயில் வண்டியில்  மோதி மண்ணுக்கு இரையாகும் முன்னோர்கள்.

இவ்வாறாக பல மனிதர்களின் பல விதங்களை இந்த சிறு பயணத்தில் காண்கிறேன்.

Ø தன் இயலாமையை காட்டி பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பவர்களுக்கும்,

Ø சும்மா காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தன் ஊனமுற்ற கால்களால் நகர்ந்து ரயிலின் தரைப் பகுதியை ஒரு துணியால் சுத்தம் செய்தும், கண் பார்வை தெரியாதவர்கள் புல்லாங்குழல் வாசித்தும், சிறு இசையை எழுப்பியவாறு பாடல்கள் பாடிக்கொண்டும்,

Ø குறவர் மக்கள் தன் சிறு குழந்தையை பல்டி அடித்தல், வளையத்துக்குள் புகுந்து வெளிவருதல் போன்ற செயல்களை செய்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கும்,

Ø கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒரு குச்சியினை வைத்து தட்டி தட்டி நடந்து வேர் கடலை பருப்பி, வாசனைப் பொருள்கள் விற்பவர்களுக்கும்,

Ø 4 ஆப்பிள் 50 ரூபாய், 4 மாதுளை 50 ரூபாய், ஊசி, பாசி, சிப்ஸ், வறுகடலை, என பலவகைப் பொருட்களை விற்பவர்களுக்கும்,

Ø கை தட்டி உரிமையோடு பயணிகளை தொட்டு காசு கேட்கும் திருநங்கைகளுக்கும்,

Ø கூடுவாஞ்சேரி அருகே 1 சதுர மீட்டர் ரூ. 900, செங்கல்பட்டு அருகே சதுர மீட்டர்  ரூ. 1300, கையில் மொபைல் இருந்தால் போதும் மாத வருமானம் ரூ. 10000, அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் (ஆனால் இதுவரை எந்த விளம்பரத்திலும் நிறுவனத்தின் பெயரை பார்த்ததில்லை.) 30,000 ரூபாய் சம்பளத்திற்கு ஆட்கள் தேவை போன்ற விளம்பரங்களுக்கும்

நகரும் ஊர்தியான இந்த மின்சார ரயில் மறைமுக வியாபாரமாகவும், நேர்முக வியாபாரமாகவும், நகரும் விற்பனை மையமாகவும், வழிகாட்டியாகவும், ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதை காண்கிறேன்.

ரயிலில் ஒரு சிறு பெண் தன் ஏழ்மையை காட்டி ஒரு ரூபாய் ஸ்டிக்கரை ஆறு ரூபாய்க்கு என்னிடம் விற்கிறாள். அவள் ஏமாற்றுகிறாள் என்பது தெரிந்தும் அவள் நிலையை பார்த்து  நான் ஏமாளியாகவே விரும்புகிறேன்.

ஆறு ரூபாய் கொடுத்துவிட்டு ஸ்டிக்கரை வாங்கிப் பார்த்தவுடன் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை என்ற நிலையில், இல்லைபா எனக்கு ஸ்டிக்கர் ஏதும் வேணாம். காச நீயே வச்சுக்கோ என்று சொன்னேன். சும்மா காசு வேணாம்ணா எதுவாச்சும் வாங்குறதுன மட்டும் காச வாங்கிக்கிறேன் என்று சொன்னாள். ஒரு நிமிடம் நான் அந்த தருணத்தில் அவளை நினைத்து பெருமிதம் கொண்டேன்.

இவ்வாறாக சில புரிதல்கள், பார்வைகள் மற்றும் சந்திப்புகளுடன் என் தொடர் பயணம் தொடர்கிறது...

Thursday, January 21, 2016

இதுதான் நம் நாடு

ஒருபுறம் "2BHK homes at Just 27 Lakhs only". (வெறும் 27 லட்சம் ரூபாய் மட்டுமே).

மறுபுறம், பிழைக்க வழி தேடி மூட்டை முடிச்சுகளுடன் வந்த இடத்தில், ப்ளாட்பாமில் அடுப்பை உண்டாக்கி அந்த வேளை பசியை போக்கும் மக்கள்.

இடம்: சென்னை புறநகர் ரயில் நிலையம்.