Thursday, October 13, 2016

வாழ்க்கை என்னும் நீண்ட பயணம்...

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். அதன் பயண தூரமானது அவரவர்களின் விதியைப் பொறுத்தது.

நாம்  பொதுவாக பயணம் மேற்கொள்வதை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று பயண நோக்கம் / காரணம், மற்றொன்று சேரும் இடம். இவை இரண்டும் தெரிந்தால்தான் பயணம் சாத்தியமாகும்.

வாழ்க்கை என்ற பயணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இரண்டு விடயங்களும் நமக்கு தெரியாது. அதனை அறிந்து கொள்ள பயணிப்பதே வாழ்க்கை.


நமது படைப்பின் நோக்கம் என்ன? அதை அறிந்து கொள்ள நினைத்தது உண்டா?

தனக்காக,
தன் குடும்பத்திற்காக,
தன் சமூகத்திற்காக,
தான் வாழும் இந்த பூமி, இயற்கைக்காக,
நாம் செய்த, செய்ய வேண்டிய செயல்கள் / கடமைகள் என்ன?

இல்லை மற்ற ஜீவராசிகளைப் போல பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விட வேண்டியவர்களா மனிதர்கள்?

உணவு, உழைப்பு, காமம், தூக்கம் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக் கூடிய பொது உணர்வுகளை மட்டும் பெற்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையா?

மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கை என்பது கிடையாதா? அதனை உணர்ந்து நாம் பயணித்தது உண்டா?

வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் தேடிச் செல்வது ஒன்றுதான்.
அது இன்பம். ரஜினி வசனத்தில் சொல்வதென்றால் “மகிழ்ச்சி”.

பிடித்த உணவை சாப்பிடுவது,
பிடித்த செயலை செய்வது,
பிடித்த படம் பார்ப்பது,
பிடித்த ஆணிடம் / பெண்ணிடம் பேசுவது.
இவ்வாறாக இன்பம் தரக்கூடிய செயல்களை தேடி செய்வது / செல்வதுதான் மனித வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது.

அந்த ஆனந்த தேடலில் நாம் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த துன்பங்களை எதிர்கொள்வதனால் உருவான அனுபவங்களை, அடுத்த தேடலுக்கான எதிர்மறையாக மாற்றாமல்
துன்பத்தின் விளைவாய் கிடைத்த அனுபவங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த தேடலை நோக்கிச் செல்வதுதான் வாழ்க்கை.

ஆனால் தாம் செய்யும் செயல் துன்பத்தை விளைவிக்கும் என்பது தெரிந்தும் கண நேர சந்தோசஷத்திற்காக அதனை விரும்பி செய்பவர்கள் ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது, பாலியல் தவறுகள், திருடுவது, பிறரை ஏமாற்றுவது போன்ற எண்ணற்ற செயல்கள்.

எவ்வளவு பெரிய துயரத்திற்கும்
மிகச் சிறந்த மருந்து, காலம்.
நாட்கள் செல்ல செல்ல அதன் ரணம் குறைந்து நாளடைவில்
அந்த துயரம் முற்றிலும் மறைந்து போகும் சாலையில் மறையும் கானல் நீர் போல...